8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி…! தொடரை கைப்பற்றியது இந்திய அணி
Author: kavin kumar18 February 2022, 11:12 pm
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இன்று இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இடையே 2-வது டி20 போட்டி நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.இந்நிலையில், 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 187 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்து இருந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக விராட் கோலி 52 ரன்களும், ரிஷப் பந்த் 52 ரன்களும், வெட்கடேஷ் 33 ரன்களையும் எடுத்திருந்தனர்.
இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர்களான மேயர்ஸ் 9 ரன்களிலும், பிரண்டன் காக் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர், இணைந்த நிகோலஸ் பூரன், ரோமன் பாவெல் இருவரும் இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர்.அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரன், ரோமன் பாவெல் இருவரும் அரை சதம் கடந்து முன்னேறிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. நிகோலஸ் பூரன் 41 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 62 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 159. பூரன் வெளியேறியதும் பாவெலுடன் கேப்டன் பொல்லார்டு இணைந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் இலக்கை எட்டுவதற்கு கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவை. பரபரப்பான சூழ்நிலையில் கடைசி ஓவரை ஹர்ஷல் பட்டேல் நேர்த்தியாக வீசினார். முதல் பந்தில் பாவெல் ஒரு ரன் எடுத்தார். 2வது பந்தை எதிர்கொண்ட பொல்லார்டும் ஒரு ரன் மட்டுமே சேர்த்தார். அதன்பின்னர் பாவெல் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாச, ஆட்டத்தில் பரபரப்பு கூடியது. ஆனால் 5வது பந்தில் அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்ததால் இந்தியாவின் வெற்றி உறுதி ஆனது.
கடைசி பந்தில் பொல்லார்டு 1 ரன் அடிக்க, வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 178 ரன்களே சேர்த்தது. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பாவெல் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. அத்துடன் டி20 தொடரையும் கைப்பற்றி உள்ளது. 3வது மற்றும் கடைசி போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.