டி20 உலகக்கோப்பையில் ஹாட்ரிக்.. சாதனை படைத்த UAE வீரர்… அட இவரு இந்த ஊர்க்காரரா..? (வீடியோ)
Author: Babu Lakshmanan18 October 2022, 4:27 pm
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நேற்றைய தினம் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி நமீபியாவும், வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி நெதர்லாந்தும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தன.
இந்த நிலையில், இன்று தனது 2வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அணியை எதிர்த்து விளையாடியது. இதில், முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் நிஷன்கா 74 ரன்களும், டிசில்வா 33 ரன்களும் குவித்தனர்.
அதேபோல, யூஏஇ அணி தரப்பில் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட்டுக்களை எடுத்து அசத்தினார். 15வது ஓவரில் 4வது பந்தில் ராஜபக்சே, அசலன்கா, ஷனாகா ஆகியோரின் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து வீழ்த்தினார். இதன்மூலம், டி20 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அதோடு, உலகளவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த 5வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக, பிரெட் லீ (2007), கர்ட்டீஸ் சேம்பர் (2021), ஹசரங்கா (2021), ரபாடா ஆகியோர் ஹாட்ரிக் எடுத்துள்ளனர்.
யூஏஇ அணிக்காக விளையாடி வரும் கார்த்திக் மெய்யப்பன் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.