பாகிஸ்தானை பந்தாடிய அமெரிக்கா… டி20 உலகக்கோப்பை போட்டியில் கடைசி நேரததில் த்ரில் வெற்றி..!!!
Author: Udayachandran RadhaKrishnan7 June 2024, 11:12 am
டி20 உலகக்கோப்பை தொடரின் 11-வது போட்டியில் இன்று பாகிஸ்தான் அணியும், அமெரிக்கா அணியும் டல்லாஸ்ஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் மோதியது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அதன்பின் களமிறங்கிய ஷதாப் கான், பாபர் ஆசம் நிதானத்துடன் கூடிய அதிரடி ஆட்டத்தால் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
இதன் மூலம் ஷதாப் கான் 25 பந்துக்கு 40 ரன்களும், பாபர் ஆசம் 33 பந்துக்கு 29 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
அதனை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது அமெரிக்கா அணி. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அமெரிக்கா அணி பவர்பிளே முடிவில் 44 ரன்களை கடந்தது.
அதனை தொடர்ந்து விளையாடிய அமெரிக்கா அணி தேவையான நேரத்தில் பவுண்டரி, சிக்ஸர் அடித்து போட்டியை சமநிலையில் வைத்திருந்தனர். பாகிஸ்தானின் ஆக்ரோஷமான பந்து வீச்சை எளிமையாக அமெரிக்கா அணி சமாளித்து ரன்களையும் குவித்தது.
குறிப்பாக அமெரிக்க அணியின் கேப்டனான மோனான்க் பட்டெல் 38 பந்துக்கு 50 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரை தொடர்ந்து ஆண்ட்ரூஸ் கௌஸ் 26 பந்துக்கு 35 ரன்கள் எடுத்திருந்தார். இறுதி வரை விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசி 6 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது.
தொடர்ந்து விளையாடிய அமெரிக்கா அணிக்கு கடைசி பந்தில் 5 ரன்கள் அடிக்க வேண்டி இருந்த நிலையில் அந்த பந்தை பவுண்டரிக்கு அடித்து போட்டியை சமன் செய்தது.இதனால், போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.
மேலும் படிக்க: கிணற்றில் தவறி விழுந்த பசு… தவித்த விவசாயி : துணிச்சலாக இறங்கிய இளைஞர்..!!
சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த அமெரிக்கா அணி 18 ரன்கள் நிர்ணயம் செய்தது. 19 ரன்கள் எடுத்தால், சூப்பர் ஓவரில் வெற்றி பெறலாம் களமிறங்கியது பாகிஸ்தான்.
அசத்தலாக பந்து வீசிய நெட்ரவால்கர் 11 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் அமெரிக்கா அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றியை பெற்றது. மேலும், முதல் முறையாக பாகிஸ்தான் அணி அமெரிக்கா அணியிடம் தோல்வியை பெற்றுள்ளது.