பேர்ஸ்டோவுடன் சண்டையிட்ட கோலி… இதெல்லாம் தேவையா..? முன்னாள் வீரரின் கருத்தை எதிர்க்கும் நெட்டிசன்கள்…!!
Author: Babu Lakshmanan4 July 2022, 11:49 am
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேர்ஸ்டோவுடன் இந்திய வீரர் விராட் கோலி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக முன்னாள் இந்திய வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 3வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் விக்கெட்டுக்களை இழந்தாலும், ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக சதமடித்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்திவிட்டார்.
முதலில் 64 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த போது, ‘என்ன! சவுதியை அடிச்சது போல அடிக்க முடியலையா? இது வேற லெவல்’ என்று அவரிடம் விராட் கோலி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். மேலும், அவரால் பந்து பீட்டன் செய்யப்படும் போதெல்லாம் கைதட்டி சிரித்து, அவரை உசுப்பேற்றி விட்டார் கோலி.
அதுவரை ஸ்டிரைக்ரேட் 20ஆக இந்த நிலையில், பின்னர் டாப் கியரை போட்டு பேர்ஸ்டோவ் அடித்து ஆட தொடங்கினார். இதற்குக் காரணம் கோலியின் ஸ்லெட்ஜிங் தான் என்று முன்னாள் இந்திய வீரர் சேவாக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “கோலி அவரை கிண்டல் செய்வதற்கு முன்னால் பேர்ஸ்டோவின் ஸ்ட்ரைக் ரேட் 21 தான். கோலியின் ஸ்லெட்ஜிங்குக்குப் பிறகு பேர்ஸ்டோவின் ஸ்ட்ரைக் ரேட் 150. புஜாரா மாதிரி ஆடிக்கொண்டிருந்தவரைப் போய் கோலி ஸ்லெட்ஜிங் செய்து ரிஷப் பண்ட்டாக மாற்றிவிட்டார்” என்று நகைச்சுவையாக கருத்திட்டுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் கைதேர்ந்தவர்கள். அவர்களிடம் கோலி இதுபோன்று நடந்து கொள்வது ஆட்டத்தின் ஒருவிதமான உத்வேகம் அளிக்கும் செயல். குறிப்பிட்ட ஓவர்களுக்கு பிறகு பந்து பந்து வீச்சாளர்களுக்கு எதிரானதாக மாறிவிடும். அதுவும் பேர்ஸ்டோ போன்ற வீரர்கள் அதிரடி ஆட்டக்காரர்கள். அவர்கள் இந்த ரன்களை குவித்ததை பெரிதுபடுத்தக் கூடாது.
அதேவேளையில், நேற்றைய பிட்சின் கண்டிஷனில் புஜாரா ஆடியது அற்புதமான ஆட்டம். அவரை இழிவுபடுத்துவது போல கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது, எனக் கூறி வருகின்றனர்.