ஒரே ஓவரில் சீட்டுகட்டுகளை போல சரிந்த விக்கெட்டுகள்… லக்னோ அணியை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!!
Author: Udayachandran RadhaKrishnan22 April 2023, 7:55 pm
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் லக்னோவின் ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதின.
இதில் டாஸ் வென்று முதலி பேட் செய்த குஜராத் அணியில், கேப்டன் ஹர்டிக்(66 ரன்கள்) மற்றும் சஹா(47 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்க தவறினர். இதனால் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்தது. லக்னோ அணியில் ஸ்டோனிஸ் மற்றும் க்ருனால் பாண்டியா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
136 ரன்கள் என்ற எளிதான இலக்கை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் ராகுல் மற்றும் மேயர்ஸ் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுக்க, மேயர்ஸ் 24 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் களமிறங்கிய க்ருனால் பாண்டியா(23 ரன்கள்) ராகுலுடன் இணைந்து பொறுப்புடன் விளையாடி வந்தார். மறுபுறம் ராகுல் சிறப்பாக விளையாடி தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த க்ருனால் பாண்டியா 23 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். கடைசி வரை களத்தில் இருந்த கேப்டன் ராகுல்(68 ரன்கள்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஸ்டோனிஸ் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால் அடுத்தடுத்து 20-வது ஓவரில் விக்கெட்களை இழந்து லக்னோ அணி(128/7ரன்கள் ) தடுமாறியது. குஜராத் அணி சார்பில், நூர் அகமது மற்றும் மொஹித் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது.