மகளிர் உலகக் கோப்பை தொடர்… அதிர்ச்சி கொடுத்த ஸ்மிருதி மந்தனா…. ரூல்டு அவுட் : இந்திய ரசிகர்கள் சோகம்!!
Author: Udayachandran RadhaKrishnan11 February 2023, 6:26 pm
8 ஆவது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடக்கிறது. பிப்ரவரி 26 வரை நடக்கும் இந்தப் போட்டியில் 10 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்றுள்ளன.
ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் என ஐந்து அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து என ஐந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இன்று பார்ல் நகரில் இரண்டு லீக் போட்டிகள் நடக்க உள்ளது. இதில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் நடக்கும் போட்டியில் இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளன.
இரவு 10.30 மணியளவில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்து அணிகளும் மோத உள்ளன. நாளை நடக்கும் போட்டியில் இந்தியா தன் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
பயிற்சி ஆட்டத்தின் போது இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரும் துணைக் கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா காயத்திலிருந்து இன்னும் மீளாத காரணத்தினால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது.
ஸ்மிருதி மந்தனா வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல் லீக் போட்டியில் ஸ்மிருதி விளையாடமாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக அவர் முதல் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் மந்தனா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.