டி20 வரலாற்றிலேயே குறைந்தபட்ச ஸ்கோர்… வெறும் 35 பந்தில் ஆல் அவுட்… ஒரேவொரு பவுண்டரி ; மோசமான சாதனையை படைத்த அணி..!!
Author: Babu Lakshmanan16 December 2022, 6:07 pm
பிக் பேஸ் கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடி வரும் சிட்னி தண்டர்ஸ் அணி மோசமான டி20 சாதனையை படைத்துள்ளது.
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போலவே ஆஸ்திரேலியாவில் பிக் பேஸ் டி20 கிரிக்கெட் லீக் மிகவும் பிரபலமானதாகும். இந்தத் தொடரின் 5வது ஆட்டத்தில் சிட்னி தண்டர் மற்றும் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின.
இதில், முதலில் பேட் செய்த அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 39 ரன்களும், டி கிராண்ட்ஹோம் 33 ரன்களும் எடுத்தனர்.
140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி தண்டர்ஸ் அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணி 10 ரன் எடுப்பதற்குள்ளேயே முதல் 8 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இறுதியில் 5.5 ஓவரில் 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
அந்த அணியில் 5 வீரர்கள் டக் அவுட்டும், 3 வீரர்கள் ஒரு ரன்னும் எடுத்தனர். சிட்னி தண்டர்ஸ் அணியின் பவுலர் டக்கெட் மட்டும் ஒரு பவுண்டரி அடித்தார். அடிலெய்டு ஸ்டிரைக்கர் அணி தரப்பில் ஹென்ரி தோர்ன்டன் 5 விக்கெட்டும், அகர் 4 விக்கெட்டும், ஷார்ட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட் போட்டியில் குறைந்தபட்ச ஸ்கோர் என்ற மோசமான சாதனையை சிட்னி தண்டர்ஸ் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக, செக்குடியரசு அணிக்கு எதிரான டி20 போட்டியில் துர்க்கி அணி 21 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.