ஓணம் பண்டிகையால் உச்சத்தை தொடும் பூக்களின் விலை… எதிர்பார்ப்பில் பூ வியாபாரிகள், கலக்கத்தில் பொதுமக்கள்!!

Author: Babu Lakshmanan
3 September 2022, 12:12 pm

ஓணம் பண்டிகை நெருங்க நெருங்க பூக்களின் விலை தொடர்ந்து உயரும் என்று பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

8ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு, மன்னார்காடு ஆகிய இடங்களுக்கு கோவையில் இருந்து அதிகப்படியான பூக்கள் (மல்லி, முல்லை, கலர் பூக்கள்) ஏற்றுமதி செய்யப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை, முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக இருந்து வருவதால் பூக்களின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில், அடுத்த வாரம் ஓணம் பண்டிகை வரவுள்ளதை ஒட்டியும், முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வருவதனாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், மல்லி, முல்லை பூக்கள் 8ம் தேதி வரை நல்ல விலை இருக்கும் எனவும், முகூர்த்த நாட்கள் எல்லாம் சேர்ந்து வரும் போது இன்னும் விலை அதிகரிக்கும் என கூறினர். கலர் பூக்களை பொறுத்தவரை ஓணம் பண்டிகையை ஒட்டி தான் அதிகமாக வியாபாரம் செய்யப்படும் எனவும், இது வருடத்திலேயே மிக பெரிய கலர் பூக்கள் வியாபாரம் எனவும் தெரிவித்தனர்.

8ம் தேதி வரை விலை உயர்வு இருக்கும் என்றும், கோவையில் இருந்து செண்டு மல்லி அதிகம் வியாபாரம் செய்யப்படும் என கூறிய அவர்கள், ரோஜா, அரளி ஆகியவை சுமார் 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுமென தெரிவித்தனர். மல்லி, முல்லை ஆகியவை 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் எனவும், ஓணம் பண்டிகை நெருங்க நெருங்க இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர். அதே சமயம் கேரளாவில் மழை இருந்தால் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறினர்.

இன்றைய தினம் செண்டுமல்லி ரூ.60க்கும், வெள்ளமல்லி ரூ.240க்கும், வாடாமல்லி ரூ.120க்கும், கலர் செவ்வந்தி ரூ.320க்கும், அரளி ரூ.200க்கும், ரோஜா ரூ.240க்கும், மல்லிகை ரூ.1200க்கும் விற்பனை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?