கேரளாவுக்கு லாரியில் உரிய ஆவணமின்றி கடத்த முயன்ற ரூ.10 கோடி ரொக்கம் பறிமுதல் ; 4 பேர் கைது… ஹவாலா பணமா..? என விசாரணை

Author: Babu Lakshmanan
30 September 2022, 3:55 pm

பள்ளிகொண்டா அருகே உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட 10 கோடி ரூபாய் பணம் குறித்து நான்கு பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய காவலர்கள் நேற்று இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஒரு காரில் இருந்து லாரிக்கு பொருட்களை ஆட்கள் ஏற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்த காவலர்கள், அவர்களிடம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும், அவர்கள் வைத்திருந்த பண்டலை பிரித்து பார்த்தபோது, அதில் பணம் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால், பண்டல் மூலம் லாரியில் ஏற்ற முயன்ற சுமார் 10 கோடி ரூபாய் பணத்தையும், காரையும் பறிமுதல் செய்த காவலர்கள் 4 பேரை கைது செய்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிடிபட்ட நபர்கள் பணத்தை கேரளாவிற்கு கடத்த இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக டிஎஸ்பி மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணண் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வேலூர் வருமான வரி துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிடிபட்டது ஹவாலா பணமா..? என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?