திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தில் கோவையில் ஒரே நாளில் 10 பேர் கைது – ரூ.40 லட்சம் மதிப்பிலான 114 சவரன் நகைகள் பறிமுதல்..!

Author: Vignesh
5 November 2022, 8:52 pm

கோவை: திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 10-பேர் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் திருடு போன 114 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்தனர்.

இதில் சிறப்பாக செயலாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்பி பத்ரிநாராயணன், சிறுமுகை காவல் நிலைய சரகத்தில் கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில் பணத்துடன் வந்த டாஸ்மாக் சூப்பர்வைசர் விஜயானந்த் என்பவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து வழிப்பறி செய்ய முயற்சி செய்ததில் சிவகங்கையைச் சேர்ந்த ஆகாஷ், லோகநாதன், மனோஜ், பட்டுக்கோட்டை சேர்ந்த ராஜா என்ற ரவிக்கண்ணன் மற்றும் சதீஷ் ஆகியோர்கள் கைது செய்துள்ளதாகவும், இதுபோல் சிறுமுகை மற்றும் அன்னூர் பகுதிகளில் 6 வழிப்பறி மற்றும் வழிப்பறி முயற்சி வழக்குகளில் ஈடுபட்டதை கண்டறிந்து அவர்களை தனிப்படையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 14 ½ பவுன் தங்க நகைகளை மீட்கப்பட்டதாக தெரிவித்தார். அதேபோல் காரமடை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மூன்று வழக்குகளில் ஈடுபட்ட திருநெல்வேலியைச் சுரேஷ் (எ) சூட்டு சுரேஷ், தென்காசியைச் சேர்ந்த மருதராஜ் (எ) சப்ஜெயில் ராஜா,தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில் மருதுபாண்டி (எ) மருது ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 72 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 இரு சக்கர வாகனத்தையும் மீட்டனர்.

அதேபோல் கோவில்பாளையம் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மூன்று வழக்குகளில் ஈடுபட்ட நீலகிரி மாவட்டத்தைச் சாலமன்மற்றும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 27 ½ பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

மொத்தமாக ஒரே நாளில் வழிப்பறி மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 10 நபர்களை கைது செய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து மொத்தம் 114 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…