விடுமுறையை நண்பர்களுடன் கழிக்கச் சென்ற சிறுவன்… கவனக்குறைவால் பறிபோன உயிர் ; கதறித் துடித்த பெற்றோர்…!!!
Author: Babu Lakshmanan29 September 2023, 12:08 pm
திருவள்ளூர் அடுத்த தண்டலம் மாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த 5ம் வகுப்பு பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம்
அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மாம்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் குமார் (40 ). இவர் பொன்னேரியில் சமையலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் நித்தீஷ் (10 ) இவன் தண்டலம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் மிலாடி நபி காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், மாணவன் நித்தீஷ் அங்குள்ள அங்கன்வாடி மைய வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது, அங்குள்ள மரத்தின் மீது ஏறி அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மேலே சென்றான். அப்போது, அங்கு பயன்படாத மின்கம்பத்தில் மாணவன் நித்தீஷ் அதைப் பிடித்து ஏறிய போது, அதிலிருந்த மின்சாரம் மாணவனை தாக்கியதால் மயங்கி விழுந்துள்ளார்.
இதையறிந்த சக மாணவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவனை மீட்டு பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நித்தீஷின் தந்தை குமார் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் நித்தீஷின் உடலை கைப்பற்றிய போலிசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊத்துக்கோட்டை சப் – இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிந்து மின்சாரம் தாக்கி மாணவன் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.