100 சவரன் நகை, கட்டு கட்டா பணம் : ரூ.2 கோடி அபேஸ் செய்த பெண்.. பரபரப்பை கிளப்பிய பகீர் சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan3 May 2023, 2:18 pm
கோவை புலியகுளம் பகுதி கிரீன் பீல்டு காலனியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
ராஜேஸ்வரிக்கு ரியல் எஸ்டேட் தொழில் மூலம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த வர்ஷினி என்பவர் அறிமுகமாகி உள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 20 தேதி ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்த வர்ஷினி ராஜேஸ்வரி தூங்கிய பின்பு வீட்டிலிருந்த சுமார் 80-100 பவுன் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள், இரண்டரை கோடி பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு அவருக்கு தெரிந்த அருண்குமார் மற்றும் நவீன்குமார் ஆகியோருடன் தப்பிச் சென்றுள்ளார்.
மறுநாள் இதுகுறித்து ராஜேஸ்வரிக்கு தெரிய வர கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் புலன்விசாரணை மேற்கொள்ள துவங்கியதை அடுத்து செல்போன் சிக்னல்களை கொண்டு ஆய்வாளர் பிரபாதேவி தலைமையிலான தனிப்படை திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் கிராமத்திற்கு சென்று அங்கு பதுங்கி இருந்த அருண்குமாரை (வயது 37) கைது செய்தனர்.
மேலும் அருண்குமாருக்கு உதவிய அவரது நண்பர்களான பிரவீன் (வயது 32) மற்றும் சுரேந்தர் (வயது 25) ஆகியோரையும் கைது செய்தனர். பின்னர் அருண்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருடிய பணத்தில் 33 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆறு ஜோடி தங்க வளையல்களை வர்ஷினி தன்னிடம் தந்ததாகவும், அதனை தனது நண்பர்களான கார்த்திக் மற்றும் சுரேந்தரிடம் கொடுத்து அனுப்பிய நிலையில் கார்த்திக்கிடம் இருந்த 31 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் சேலம் வருமான வரித்துறையில் மாட்டிக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனை அடுத்து அருண்குமாரிடம் மீதி இருந்த இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் ஆறு ஜோடி தங்க வளையல்களை கைப்பற்றிய போலீசார் மூவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான வர்ஷினியையும் மற்றும் நவீன்குமார், கார்த்திக் ஆகியோரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.