மகளிர் உரிமைத் தொகை திட்டம்… விண்ணப்பிக்கச் சென்ற பெண்கள் ஏமாற்றம்… திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!

Author: Babu Lakshmanan
17 October 2023, 2:38 pm

புதுக்கோட்டை அருகே மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு செய்ய சென்ற பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளன்று இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் 1.63 கோடி பெண்கள் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை மாதம்தோறும் செலுத்தப்படும். இதில் 56 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பல பெண்கள் தகுதி இருந்தும் தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பலருக்கு உரிமைத் தொகை கிடைக்கப் பெறவில்லை என்ற ஏமாற்றமும் அந்த பெண்களின் குரல்களில் தெரிகிறது.

இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் அதுகுறித்து மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் செப்டம்பர் 18 தேதி முதல் 30 நாட்களுக்குள் இ- சேவை மையம், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்யலாம்.

பிறகு அதிகாரிகள் அந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்தி அவை ஏற்றுக் கொல்லப்பட்டதா? இல்லையா என்பதை அறிவிப்பார் என அரசு தெரிவித்திருந்தது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று செப்டம்பர் 18 ஆம் தேதி மேல் முறையீடு செய்யலாம் எனவும், தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்கள் கலைஞர் உரிமைத் தொகைக்கு மேல் முறையீடு செய்வதற்காக சென்றபொழுது, கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் வராததால் அதிருப்தியடைந்தனர்.

எனவே, அதிகாரிகளைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதுக்கோட்டை தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பெரிய சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!