கோவை மாவட்டத்தில் 1052 மனுக்கள் வாபஸ் : இறுதி வேட்பாளர்கள் எண்ணிக்கை வெளியீடு
Author: kavin kumar7 February 2022, 10:01 pm
கோவை: கோவை மாநகரில் உள்ளாட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 264 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் மொத்தமாக 4,573 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.வேட்பு மனு மீதான பரிசீலனையில் முடிவில் 143 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 4430 மனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில், கோவை மாநகரில் மட்டும் பெறப்பட்ட 1130 வேட்பு மனுக்களில் பரிசீலனைக்கு பின் 86 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1,044 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த சூழலில், வேட்பு மனுக்களை திரும்பப்பெற இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி, மாநகரில் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில் இருந்து 264 வேட்பு மனுக்களை சம்மந்தப்பட்ட வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர். மேலும், நகராட்சிகளில் 206 பேரும், பேரூராட்சிகளில் 582 பேரும் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுள்ளனர். அதன்படி மாவட்டம் முழுவதும் 1052 பேர் வேட்பு மனுக்களை திரும்பப்பெற்றுள்ளனர்.இதனிடையே கோவை மாவட்டத்தில் பெரிய நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் மட்டும் 9 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.