10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் அப்டேட்.. மதுரை சிறையில் தேர்வு எழுதிய சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி..!!!
Author: Babu Lakshmanan19 May 2023, 11:53 am
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், மதுரையில் சிறையில் தேர்வு எழுதிய சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.39% ஆகும். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16%. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1020 அரசு பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் 97.67% தேர்ச்சி விகிதத்துடன் முதல் இடம் பிடித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் 83.54% தேர்ச்சி விகிதத்துடன் கடைசி இடம் பிடித்தது.
இதன் ஒருபகுதியாக, மதுரை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய சிறைவாசிகள் 100% தேர்ச்சியடைந்துள்ளனர். மதுரை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 23 ஆண்கள், ஒரு பெண் என தேர்வு எழுதிய 24 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சிறைவாசி அறிவழகன் என்பவர் 308 மதிப்பெண்கள் மற்றும் சிறைவாசி உதயகுமார் 303 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.