தந்தையை இழந்த பிறகு வறுமை… தன்னம்பிக்கையை இழக்காத மாணவன்.. மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை …!!

Author: Babu Lakshmanan
19 May 2023, 3:40 pm

நெல்லையில் தந்தையை இழந்த போதிலும் தன்னம்பிக்கை இழக்காத மாணவர் அர்ஜுன பிரபாகரன் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று சாதனை.

தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் பல்வேறு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் தந்தையை இழந்த மாணவன் ஒருவன் கடும் வறுமையிலும், தனது தாயின் முயற்சியோடு படிப்பை தொடர்ந்து பத்தாம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

அதாவது தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசகம். இவரது மனைவி பண்டாரச் செல்வி. இவர்களது மகன் அர்ஜுன பிரபாகரன். இவர் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள நூறாண்டு பழமையான அரசு உதவி பெறும் பள்ளியான மதிதா இந்து பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மாணவன் அர்ஜூன பிரபாகரனின் தந்தை மாணிக்க வாசகம் உயிரிழந்து விட்டார். இதனால் வீட்டில் வறுமை சூழ்ந்து கொண்டது.

கணவனை இழந்த நிலையில் எப்படியாவது தனது மகனை படிக்க வேண்டும் என பண்டாரச்செல்வி ஆசை பட்டுள்ளார். அதேபோல் மாணவனின் நிலைமையை அறிந்த பள்ளி நிர்வாகமும், அவனுக்கு பல்வேறு உதவிகளை செய்தனர். குறிப்பாக காலை, மதியம் இரண்டு வேளை இலவசமாக உணவு வழங்குவது முதல் படிப்பு செலவுகளுக்கு அப்போது ஆசிரியர்களே பண உதவியும் செய்துள்ளனர்.

இதன் காரணமாக மாணவன் அர்ஜுன பிரபாகரன் விடாமுயற்சியுடன் தனது படிப்பில் கவனம் செலுத்தியுள்ளார். அதன் விளைவாக இன்று வெளியான பொதுத்தேர்வு முடிவில் மாணவனின் அர்ஜூன பிரபாகரன் 495 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். தந்தையை இழந்த போதிலும் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து பாடங்களை சிறப்பாக படித்து வந்துள்ளார். போதிய குடும்ப வருமானம் இல்லாத நிலையில் தாய் கூலி வேலை செய்து இவர்களை காப்பாற்றி வந்துள்ளார்.

குடும்ப செலவிற்கே வருமானம் போதாத நிலையில் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இவர் படித்த பள்ளியின் ஆசிரியர்கள் செய்து வந்துள்ளனர். தமிழில் 97, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 99, சமூக அறிவியல் 100 என மதிப்பெண்கள் அவருக்கு கிடைத்துள்ளது. இரண்டு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

தந்தை இல்லாத நிலையிலும் ஏழ்மையான குடும்ப சூழலும் , யாரும் படிக்க கட்டாயப்படுத்தாத சூழ்நிலையிலும் மாணவர் அர்ஜுன் பிரபாகர் அசத்தல் வெற்றி பெற்றுள்ளார். பள்ளியின் ஆசிரியர்கள் இணைந்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளனர். ஆசிரியர்களும், பெற்ற தாயும் பெருமை கொள்ளும் வகையில் அவரது மதிப்பெண்கள் அமைந்து இருக்கிறது என்றால், அது மிகையல்ல.

மேலும் மகாகவி பாரதியார் பயின்ற இந்த பள்ளியை சேர்ந்த மாணவர் மாவட்ட அளவில் முதலாவது மதிப்பெண்ணை பெற்று பள்ளியையும், பாரதியையும் தலை நிமிர செய்துள்ளார்.

இது குறித்து மாணவன் அர்ஜுன பிரபாகரன் கூறும்போது- பள்ளியில் ஆசிரியர்கள் எனக்கு பெரிதும் உதவி செய்தனர். அதனால் தான் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்க முடிந்தது. எனது தந்தை இறந்துவிட்டார். அம்மா கூலி வேலை செய்து வருகிறார். மாவட்டத்தின் முதல் மதிப்பெண் எடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவர் அல்லது இன்ஜினியராக வேண்டும் என்பதே எனது கனவு தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 439

    0

    0