வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கும் 111 தமிழக விவசாயிகள்… நாடாளுமன்ற தேர்தலில் பரபரப்பு

Author: Babu Lakshmanan
1 May 2024, 4:44 pm

வாரணாசியில் போட்டியிடும் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் மனு தாக்கல் செய்ய உள்ளதாக விவசாயி அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சியில் உள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த 111 விவசாயிகள் வாரணாசியில் போட்டியிடும் மோடிக்கு எதிராக மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

மேலும் படிக்க: புதிய உச்சத்தை தொட்ட ஜிஎஸ்டி வசூல்… மலைக்க வைத்த ஏப்ரல் மாத Collection : பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு!

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அய்யாக்கண்ணு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- உரிமைக்காக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பயணம் செல்லும் உரிமை எல்லாருக்கும் உண்டு. ஆனால் விவசாயிகள் மட்டும் பஞ்சாபில் இருந்து டெல்லிக்கு போகக்கூடாதா..? ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு போகக்கூடாது என விவசாயிகளை மிரட்டுவது இதே போல் தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு வரக்கூடாது என இதெல்லாம் சர்வாதிகார நாட்டில் நடப்பது போல் உள்ளது.

மோடி இரண்டு மடங்கு லாபம் தருவேன் என்று சொன்னார். அது கொடுத்தால் எங்களுக்கு போதும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 30 லட்சம் கோடி தள்ளுபடி செய்துள்ளனர். நாங்கள் கேட்பதோ, ஒரு லட்சம் கோடி தான், அதிலும் 90 கோடி இந்து விவசாயிகள். ஆனால் எங்களது கோரிக்கை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது. 18 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ நெல்லுக்கு 54 ரூபாய் தருகிறேன் என கூறினார். தற்போது 22 ரூபாய் மட்டுமே கொடுக்கின்றனர். அதில், ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றுக் கொள்கின்றனர்.

2,100க்கு விற்கும் கரும்பிற்கு ரூபாய் 8,100 ரூபாய் தருகிறேன் என கூறினார். தற்பொழுது வெறும் 3,150 மட்டுமே தருகின்றனர். இது ஞாயமா போராடினால் போராடக் கூடாது என கூறுகிறார்கள். 60 வயது உள்ள விவசாயிகளுக்கு 5000 பென்ஷன் கேட்டாலும் தர மறுக்கிறார்கள். அதற்காக டெல்லியில் சென்று போராடுவதற்கு உரிமை இல்லை என கூறுகிறார்கள்.

எனவே மோடி சொல்லியும் எதையும் அவர் செய்யவில்லை. எனவே, அவரை எதிர்த்து இந்தியாவிலிருந்து ஆயிரம் விவசாயிகளும், தமிழகத்திலிருந்து 111 விவசாயிகளும் அரை நிர்வாணமாக தேர்தல் மனு தாக்கல் செய்ய உள்ளோம். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எங்களது கோமணத்தையும் பிடுங்கி விடுவாய். எனவே, பொதுமக்களே எங்களை காப்பாற்றுங்கள் என கூறி மனுதாக்கல் செய்ய உள்ளோம், எனக் கூறினார்.

111 விவசாயிகள் மனு தாக்கல் செய்வது தேர்தலை சீர்குலைப்பதாக இருக்காதா என்ற கேள்விக்கு, எங்களது அடிப்படை உரிமையை காலி செய்ய பார்க்கின்றனர். எனவே, இது சீர்குலைப்பது கிடையாது. எங்களுக்கு அவர் நாமத்தை போட்டுவிட்டார். அதை காண்பிக்கத் தான் 111 பேர் மனு தாக்கல் செய்ய உள்ளோம், என தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 375

    0

    0