காதலை ஏற்க மறுத்த 11ம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து : தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி.. தப்பியோடிய இளைஞரை தேடும் போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2022, 10:27 pm

திருச்சி : மணப்பாறையில் காதலை ஏற்க மறுத்த 11 ம் வகுப்பு பள்ளி மாணவியை சரமாரியாக குத்திய வாலிபர்.ஏற்கனவே போக்சோவில் கைதான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை, திருச்சி சாலையில் உள்ள அத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவி தனியார் பள்ளி ஒன்றில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார்.

இறுதித் தேர்வை இன்று எழுதி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவி பின்னர் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். திருச்சி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் தன்னுடைய காதலை கூறவே அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்து உள்ளிட்ட 10 இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு தப்பினார்.

இதனால் மாணவி ரத்த வெள்ளத்தில் அலறல் சப்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மாணவிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கத்தியால் குத்தியவர் பொத்தமேட்டுப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த கேசவன் (வயது 22) என்பதும் ஏற்கனவே அந்த மாணவியை கடந்த ஆண்டு ஜுன் மாதம் கடத்திச் சென்றதும் அப்போது மாணவியின் தாயார் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கேசவன் மற்றும் அவரது பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இவ்வழக்கு திருச்சி மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தான் இன்று மீண்டும் மாணவியை சந்தித்த கேசவன் மாணவியுடன் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மணப்பாறை போலீசார் வாலிபரை தேடி வருகின்றனர். பள்ளி மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி