கைக்குட்டையால் வாயைப் பொத்திய அடுத்த நொடி.. கர்ப்பமான 11-ம் வகுப்பு மாணவி!
Author: Hariharasudhan9 December 2024, 5:58 pm
குமரி மாவட்டத்தில், மயக்க மருந்தால் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி : குமரி மாவட்டத்தில் தொழிலாளி ஒருவரின் மகள் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு பள்ளியில் கணிதத் தேர்வு நடைபெற்று உள்ளது. இந்தத் தேர்வு முடிந்ததும் அந்த மாணவி வழக்கம்போல் வீட்டிற்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறி தன்னுடைய பகுதியில் இறங்கியுள்ளார்.
இதன் பின்னர் வீட்டுக்கு நடந்து சென்ற மாணவி, தன்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றுள்ளார். அப்போது மாணவியை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென மாணவியின் முகத்தில் கைக்குட்டையை வைத்துள்ளார். இதில் அந்த மாணவி மயங்கி உள்ளார்.
பின்னர், சிறிது நேரம் கழித்து மாணவி கண் விழித்து பார்த்துள்ளார். அப்போது, அவர்வீட்டிற்குள் இருந்ததையும், ஆடைகள் கலைந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அது மட்டுமல்லாமல், தன்னை ஒருவர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பிச் சென்றதையும் உணர்ந்து கதறி அழுதுள்ளார்.
ஆனால், இந்தச் சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என பயந்த மாணவி இது குறித்து பெற்றோரிடம் கூறாமல் மறைத்து உள்ளார். இந்த நிலையில், மாணவியின் தந்தை வேலை நிமித்தமாக குடும்பத்துடன் கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: எட்டிப்பார்த்த நபரை ஹீரோவா மாற்றிய பாரதிராஜா…மாஸ் ஹிட் ஆன படம்…!
அங்கு சில மாதங்கள் கடந்த நிலையில், மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் மாணவியை எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி கர்ப்பமாக இருப்பதாக கூறி உள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது பற்றி மாணவியிடம் கேட்டபோது, தனக்கு ஏப்ரல் மாதம் நடந்த கொடுமையைக் கூறி மாணவி கதறி அழுது உள்ளார். அதேநேரம், மாணவி கர்ப்பமாக இருப்பது பற்றி மருத்துவமனை தரப்பில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாணவியை மார்த்தாண்டத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், மயக்க மருந்து தடவி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது எதுவும் தெரியவில்லை என்று மாணவி கூறியுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.