மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் பலி.. கால்பந்து விளையாடும் போது நிகழ்ந்த சோகம்… உறவினர்கள் சாலைமறியல்…!!

Author: Babu Lakshmanan
12 July 2023, 8:57 am

மீஞ்சூரில் உயர் மின்விளக்கு கோபுரத்தின் கீழ் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் வசிப்பவர் தேவி (45). கணவனை இழந்த தேவி தன்னுடைய இரண்டு மகன்கள் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். இதில் இளைய மகன் ரூபேஷ் (14) அருகில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

வீட்டின் அருகே கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அருகில் உள்ள உயர் மின் விளக்கு கோபுரத்தின் கீழ் உள்ள மின்சார பெட்டியை தொட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக மின்சாரம் தாக்கி ரூபேஷ் மயக்கம் அடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் மின்விளக்கு பெட்டியில் இருந்த ரூபேஷின் கைகளை அகற்றிவிட்டு, ரூபேஷை மீஞ்சூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது, சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால், இதை ஏற்க மறுத்த உறவினர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிறுவனை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தி தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மீஞ்சூர் பொன்னேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர் இதன் காரணமாக இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அங்கு வந்த பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் இறந்த ரூபேஷ் தாயிடத்தில் இதுகுறித்து விசாரணை செய்து நாளை சார் ஆட்சியரிடம் பேசி முடிவு எடுப்பதாக சமரசம் மேற்கொண்ட நிலையில், உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர் மின்விளக்கு கோபுரத்தின் கீழ் மின்சாரம் தாக்கி 2 ஆடுகள் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், இது குறித்து மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் மின் ஊழியர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால்,
தற்போது சிறுவன் அதே இடத்தில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 455

    0

    0