தமிழகத்தில் மாணவிகளுக்கு எதிராக தொடரும் அவலம்… 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : திமுக கிளைச் செயலாளர் போக்சோவில் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2022, 11:43 pm

மதுரை வலையங்குளம் பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக கிளைச் செயலாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான வீரணன் என்பவர் ரேடியோ செட் தொழில் செய்து வருகிறார். இவர் வலையங்குளம் பகுதி திமுக கிளை செயலாளராகவும் உள்ளார்.

திருப்பரங்குன்றத்திற்கு அருகே உள்ள ஒரு தம்பதியினருக்கு 16 வயதில் ஒரு மகள் மற்றும் ஒரு இளைய மகன் உள்ளனர். மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுமியின் தாயார் விபத்து ஒன்றில் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தாயார் இறப்பிற்குப்பின் அவருடைய தந்தை சிறுமி மற்றும் சிறுமியின் தம்பி ஆகியோரின் படிப்புத் தொடர்பாக இணையதள கல்விக்காக தொலைபேசி எண் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

அதன் மூலம் சிறுமியிடம் அடிக்கடி தொடர்புகொண்டு பேசி பழகிய வீரணன், பள்ளி சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி, பாலியல் தொல்லை கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதையறிந்த சிறுமியின் தந்தை கடந்த 10 நாட்கள் முன் வீரணன் மற்றும் சிறுமியை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து திமுக கிளைச் செயலாளர் வீரணன் பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டதுடன் கடந்த சில நாட்களுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த சிறுமியின் தந்தை நேற்று இரவு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வீரணனை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1371

    0

    0