17 வயது சிறுவனிடம் சில்மிஷம்… அதிர்ச்சி வீடியோ லீக் : திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான குற்றவாளியின் பின்னணி!!
Author: Udayachandran RadhaKrishnan27 July 2023, 10:17 am
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அல் ஆசிக் என்ற ஆசிக்முகமது (வயது 29). இவர் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவராக இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் அந்த பதவியில் இருந்து விலகி கொண்டதாக அறிவித்தார்.
இவர் 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து கடந்த மாதம் ஆசிக்முகமது மீது போக்சோ சட்டத்தில் திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி திண்டுக்கல் அண்ணாநகரில் ஸ்கூட்டரில் சென்ற தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் சரவணன் என்ற பட்டறை சரவணன் (30) கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆசிக்முகமது உள்பட 8 பேர் அருப்புக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவரை திருச்சி சிறையில் அடைத்தனர்
இதைத் தொடர்ந்து போக்சோ வழக்கில் ஆசிக்முகமதுவை கைது செய்ய திண்டுக்கல் மேற்கு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி திருச்சி சிறையில் இருக்கும் ஆசிக்முகமதுவை போக்சோ வழக்கில் மேற்கு போலீசார் இன்று கைது செய்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.
ஆசிக்முகமது கோர்ட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். மேலும் திண்டுக்கல் கோர்ட்டு வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பலத்த பாதுகாப்புடன் போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆசிக்முகமது ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்த மாதம் 9- ம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை மீண்டும் திருச்சி சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இதனால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.