எஸ்பிஐ வங்கியில் 1850 நெல் மூட்டைகள் கொள்ளை : கடன் வாங்க அடகு வைத்த விவசாயியே திருடிய கொடுமை.. 3 பேர் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan20 March 2022, 5:49 pm
திருப்பூர் : தாராபுரத்தில் எஸ்பிஐ வங்கியில் ரூ.18 லட்சத்திற்கு அடகு வைத்த 1850 நெல் மூட்டைகளை கொள்ளையடித்து சென்ற விவசாயி மற்றும் குடோன் கண்காணிப்பாளர்கள் ஆகிய மூன்று பேர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குறிஞ்சி நகரை சேர்ந்த விவசாயி ராஜ்குமார் இவர் கடந்த ஆண்டு பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 1850, நெல் மூட்டைகளை அடமானமாக வைத்து ரூ, 18 லட்சம் ரூபாய் கடன் தொகையாக பெற்றுள்ளார்.
இந்த 1850 நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பொறுப்பை பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்.சி.எம்.எல். நிறுவனத்திடம் வங்கி நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர்.
அந்த நிறுவனம் தாராபுரம் தட்சன்புதூர் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுந்தரம் என்பவரது குடோன் வாடகைக்கு எடுத்து அங்கு 1850 நெல் மூட்டைகளை வைத்திருந்தனர். இந்த நெல் குடோனை கண்காணிக்க எஸ். சுரேஷ்குமார் மற்றும் எம். சுரேஷ் குமார் ஆகிய இருவரை என்.சி.எம்.எல். நிறுவனம் நியமித்திருந்தது.
இந்தநிலையில் குடோனில் வைக்கப்பட்டிருந்த 1850, நெல் மூட்டைகளை கடன் பெற்ற விவசாயி ராஜ்குமார் மற்றும் குடோன் கண்காணிப்பாளர்கள் எஸ். சுரேஷ்குமார் மற்றும் எம்.சுரேஷ் குமார் ஆகிய மூவரும் கூட்டு சேர்ந்து நெல் மூட்டைகளை திருடி விற்பனை செய்துள்ளனர் ஆனால் நெல் மூட்டைகள் குடோனில் இருப்பதாக குடோன் கண்காணிப்பாளர்கள் இருவரும் கண்காணிப்பு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து வந்துள்ளனர்.
இதற்காக வங்கி நிர்வாகத்தினர் மாதந்தோறும் அவருக்கு சம்பளத் தொகை வழங்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நெல் குடோனை ஆய்வு மேற்கொள்வதற்காக வங்கியிலிருந்து குடோனுக்கு சென்று திறந்து பார்த்தபோது அங்கு நெல் மூட்டைகளை காணவில்லை இதுகுறித்து வங்கி நிர்வாகம் என்.சி.எம்.எல். பெருந்துறையை சேர்ந்த ஆபத்து மற்றும் மீட்பு மேலாளர் தேவராஜ் இடம் புகார் செய்தனர்.
மேலும் குடோன் பாதுகாப்பு நிர்வாக கண்காணிப்பாளர்கள் எஸ்.சுரேஷ் குமார் மற்றும் எம்.சுரேஷ் குமார் விவசாயி ராஜ்குமார் ஆகியோர் நெல் மூட்டைகளை திருடி விட்டதாக அவர்கள் மீது தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நெல் மூட்டைகளை திருடிய குடோன் மேலாளர் மற்றும் விவசாயி ஆகிய 3, பேர் மீதும் நடவடிக்கை எடுக்க தாராபுரம் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விவசாயி மற்றும் சூப்பர்வைசர்கள் இரண்டு பேரும் நெல் மூட்டைகளை திருடியதாக ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து 3, பேரையும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிகண்டன் கைது செய்து சிறையில் அடைத்தார்.
வங்கியில் கடன் பெற்று கொண்டு நெல் மூட்டைகளை விவசாயிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் கொள்ளையடித்த சம்பவத்தால் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.