வீடு கட்டித்தருவதாக ஆசிரியரிடம் ரூ.30 லட்சம் மோசடி… தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த பெண் உள்பட 2 பேர் கைது!!
Author: Babu Lakshmanan9 November 2022, 10:35 am
கோவை : கோவை அருகே வீடு கட்டித் தருவதாக ஆசிரியரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஒண்டிப்புதூர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வருபவர் கார்த்திக் பிரபு. இவர் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்ட விரும்பினார். இதற்காக கோவை ராமநாதபுரம் பகுதியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த ஜெகநாத்சிங், கலைவாணி ஆகியோரை அணுகினார். அப்போது, காளப்பட்டி நேரு நகர் பகுதியில் வீட்டுமனை இருப்பதாக கூறி அழைத்துச் சென்றனர்.
அந்த நிலம் கார்த்திக் பிரபுவுக்கும், அவருடைய மனைவிக்கும் பிடித்து இருந்தது. இந்த நிலத்துக்காக முன்பணமாக ரூ.30 லட்சம் கொடுத்தால்தான் அடுத்தகட்ட பணியை மேற்கொள்ள முடியும் என்று ஜெகநாத்சிங் கூறியதால், ரூ.30 லட்சத்தை ஆசிரியர் கார்த்திக்பிரபு கொடுத்தார். ஆனால், மேற்கொண்டு வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லை. இதுதொடர்பாக பலமுறை கேட்டபோதும் பணத்தை கொடுக்கவில்லை.
இது தொடர்பாக கார்த்திக்பிரபு விசாரித்தபோது,வேறு யாருடைய நிலத்தையோ காட்டி முன்பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து ராமநாதபுரம் போலீசில் கார்த்திக்பிரபு புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகநாத்சிங், கலைவாணி ஆகியோரை கைது செய்தனர்