இரண்டே நாளில் 5 பெண்களிடம் செயின் பறிப்பு… கோவை மாநகரில் அதிகரித்த குற்ற சம்பவம்… தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு!!

Author: Babu Lakshmanan
28 August 2023, 12:55 pm

கோவை மாநகரில் 2 நாளில் 5 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியதை தொடர்ந்து, கோவை மாநகரில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு சம்பவங்கள், பணப்பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இரத்தினபுரி, டாடா பாத், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் ஒரே நாளில் நடந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்காக மாநகர காவல்துறை சார்பில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை தேடி வருகிறனர்.

மேலும் செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராக்களில் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாநகர் முழுவதும் போலீசார் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ரத்தினபுரி, என பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வாகனங்களில் வருபவர்களிடம் விசாரணை நடத்தி, அதன் பின்னரே அனுமதித்து வருகின்றனர். மேலும், வாகன திருட்டு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!