மதுபோதையில் தகராறு… நடுரோட்டில் மாறி மாறி தாக்கிக் கொண்ட கூலி தொழிலாளிகள்.. ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி..!!
Author: Babu Lakshmanan1 November 2022, 10:22 am
புதுக்கோட்டை : ஆலங்குடியில் சிற்ப வேலைக்கு சென்ற கூலி தொழிலாளர்கள் இருவர் மது போதையில் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஒரு கோயிலில் சிற்ப வேலைக்காக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கைலாசநாதபுரத்தைச் சேர்ந்த ரவி (44) என்பவரும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா உட்பட்ட நாச்சியார்புரத்தை சேர்ந்த சண்முகநாதன்(26) ஆகிய இருவரும் வந்துள்ளனர்.
அப்போது, இருவரும் பணி முடிந்த பிறகு அப்பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்திவிட்டு சென்றபோது, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாய் தகராறு கைகலப்பாக மாறியதைத் தொடர்ந்து, ஒருவரை ஒருவர் கீழே தள்ளி கற்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் ரவி படுகாயம் அடைந்த நிலையில், சண்முகநாதனும் காயமடைந்துள்ளார்.
இதனை அடுத்து அருகே இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தற்பொழுது ரவி தலையில் 25 தையல் உள்ளிட்ட உடல் முழுவதும் 31 தையலுடன் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், அதே போல் சண்முகநாதன் சிறு காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆலங்குடியில் மக்கள் நடமாட்டம் உள்ள கடைவீதி பகுதியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த சிற்பத் தொழிலாளர்கள் இருவரும் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
0
0