நின்றிருந்த லாரி மீது அதிவேகத்தில் மோதிய கார்: 2 பேர் உடல் நசுங்கி பலி…கோவையில் சோகம்!!
Author: Rajesh31 March 2022, 11:30 am
கோவை: வாளையாறு சோதனை சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் குத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலாஜி (49). இவரது நண்பர் முருகேசன் (47). இருவரும் பனியன் தொழில் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இவரது நண்பர் வெளிநாடு செல்வதர்காக அவரை கார்மூலமாக கொச்சி அழைத்துச் சென்றனர்.
இவர்களுடன் மொய்தீன் மற்றும் பக்ரூதீன் ஆகியோரும் சென்றனர். நண்பரை விமானத்தில் வழியனுப்பிவிட்டு தமிழகம் நோக்கி திரும்பினர். காரை மொய்தீன் ஓட்டி வந்தார்.
இவர்களது கார் இன்று காலை 4.30 மணியளவில் வாளையாறு சோதனை சாவடி அருகே வந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் பாலாஜி, முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரை ஓட்டி வந்த மொய்னுதீன் காயமின்றி உயிர் தப்பினார். ஓட்டுநரின் பின் இருக்கையில் இருந்த பத்ருதீனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டனர்.
மேலும், உயிரிழந்த இருவரின் சடலத்தையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.