மூட்டை மூட்டையாக குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் கைது… ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் பறிமுதல்
Author: Babu Lakshmanan11 October 2022, 9:18 am
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார், ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக, கஞ்சா மற்றும் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கெள்ளும் வகையில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, அனைத்து சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
அதன்படி இன்று கண்டோன்மெண்ட், ஜயப்பன்கோவில் தனிப்படை காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த வாகனத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள, ஹான்ஸ் 6 மூட்டைகள், விமல்பாக்கு 12 மூட்டைகள், கூல்லிப் – 2 மூட்டைகள் மற்றும் RMD பான்பராக் 20 பாக்ஸ் ஆகிய குட்கா பொருள்களை அவற்றை பறிமுதல் செய்தனர்.
நடைபெற்ற விசாரணையில் அந்த நபர் புத்தூர், வி.பி.என்.தெருவை சேர்ந்த
பன்னீர்செல்வம் என்பவரது மகன் ஜெயராமன்(33) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திருச்சி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தெடர்ந்து மேற்கொள்ளப்படும், என திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.