ஆன்லைனில் வெடிமருந்து தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கிய இருவர் ; கோவையில் அடுத்தடுத்து அதிர்ச்சி… என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

Author: Babu Lakshmanan
23 நவம்பர் 2022, 6:06 மணி
Quick Share

கோவை : கோவையில் ஆன்லைனில் வெடி மருந்துக்கு தேவையான வேதிப்பொருள் வாங்கியதாக இரண்டு பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, மங்களூரிலும் ஆட்டோவில் நிகழ்ந்த குக்கர் குண்டு வெடிகுண்டு சம்பவம் இந்தியாவை பெரும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சிலரை கைது செய்து, என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வெடி மருந்து பொருட்கள் வாங்குபவர்களை கண்காணித்து வருகின்றனர்.

அதேபோல, ஆன்லைனில் வெடி மருந்துக்கு பயன்படும் வேதி பொருட்கள் வாங்குபவர்களையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவில்பட்டியை சேர்ந்த இளைஞரும் கோவையைச் சேர்ந்த இளைஞரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்தில் சிக்கினர்.

கடந்த மே மாதம் 13 ஆம் தேதி கோவை குரும்பபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் flipkart-ல் பொட்டாசியம் நைட்ரேட் 100 கிராம் மற்றும் சல்பர் 100 கிராம் ஆகியவற்றை ஆர்டர் செய்து அதே மாதம் 20ம் தேதி வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை போலீசார் இந்த மாதம் 19 ஆம் தேதி செந்தில்குமாரை அலைபேசியில் அழைத்து விசாரணை செய்து, கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு நேரடியாக அழைத்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் மேற்படி செந்தில்குமார் பொருட்களை தான் வாங்கவில்லை என்றும், தான் பீளமேடு காவல் நிலைய சரகத்தில் உள்ள தண்ணீர் பந்தல் அருகில் சாலையோரம் தள்ளுவண்டி கடையில் பழ வியாபாரம் செய்து வருவதாகவும், எனது கடையில் பணிபுரியும் மாரியப்பன் என்பவர் தான் எனது செல்போன் மூலம் ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கியதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பனை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் மாரியப்பன் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

மேலும், தனது எதிரியான மகாராஜன் என்பவரை குண்டெறிந்து கொள்ள முயற்சி செய்வதற்காக இந்த வெடிபொருட்கள் வாங்கியதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாரியப்பனை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டனர். மேல்விசாரணையை சரவணம்பட்டி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

  • Roja முதலமைச்சர் பதவியில் நீங்க உட்காருங்க.. துணை முதலமைச்சர் நடிகை வைத்த கோரிக்கை!
  • Views: - 416

    0

    0