அரசு பள்ளி கழிவறையில் கஞ்சா புகைத்த +2 மாணவர் : அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்.. தடம் மாறும் இளைஞர்கள்.!!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2024, 5:04 pm

தமிழகத்தின் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து வகை கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் சிலரின் செயல்பாடுகளைப் பார்த்தால் இருப்பது தமிழகமா ? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

பல இடங்களில் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் ஜாதி மோதல்கள் ஒரு புறம் என்றால், ஆசிரியர்களை தாக்கும் புது கலாசாரம் இன்னொரு புறம் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது.

கடந்த காலங்களில் கல்வி கற்று மிகப்பெரும் அறிஞர்கள் ஆனவர்கள். அன்றைய காலத்தில், அரசனின் மகனே ஆனாலும், குருவுக்கு பணிவிடை செய்து தான் கல்வி கற்க முடியும். அதன் பின்னர் தங்கள் பிள்ளைகள் எப்படியாவது படித்து உயர்ந்த இலக்கை அடைய வேண்டும் என நினைத்த பெற்றோர்கள், ஆசிரியர்களை சந்தித்து “எப்படியாவது எனது பிள்ளையை நன்றாக படிக்க வைத்து விடுங்கள். முட்டிக்கு கீழ் உரித்து எடுங்கள்’ என்று கூறிய காலத்தில் படித்த பிள்ளைகள் நல்ல நிலைக்கும் வந்தனர்.

இன்றோ நிலைமை தலை கீழ். “எனது பையனை எப்படி கண்டிக்கலாம், அடிக்கலாம்’ என ஆசிரியர்களுடன் தகராறு செய்யும் பெற்றோர்கள் அதிகரித்து விட்டனர்.

இந்நிலையில் கோவையை அடுத்து வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் மெயின் சாலையில் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் பள்ளியின் கழிவறையில் பீடிக்குள் கஞ்சா வைத்து புகைத்ததாக மாணவர்கள் சிலர் புகார் கூறினர்.

இது பற்றி அவர்கள் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். உடனே அவர்கள் சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து பேசினர். அப்பொழுது அந்த மாணவன் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக தெரிகிறது.

இதை அடுத்து அந்த மாணவரின் பெற்றோரை பள்ளிக்கு வர வழைத்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவரிடம் எழுத்து மூலம் விளக்கம் பெறப்பட்டது. இதை அடுத்து வேறு மாணவர்கள் யாருக்கும் அது போன்ற தவறான பழக்கம் இருக்கிறதா ? என்பது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் வேடப்பட்டி, நாகராஜபுரம், குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது. எனவே போலீசார் தீவிர ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 279

    0

    0