+2 மாணவி மர்ம மரணம்.. பள்ளிக்கு சீல் வைக்க கோரி மக்கள் போராட்டம் : தடுப்பை மீறி நுழைந்தவர்களை தடுத்த போலீஸ்.. பதற்றம்!!
Author: Udayachandran RadhaKrishnan16 July 2022, 5:39 pm
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீ மதி அதிகாலை விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளி மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து விடுதியில் தங்கி பயின்று வந்த மற்ற மாணவ மாணவிகளை பெற்றோர்கள் மூலம் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக பள்ளி மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டி உள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வருவதாக தனது தாயிடம் கூறிய ஸ்ரீ மதி இன்று சடலமாக கிடப்பதாக கூறி பள்ளி மாணவியின் தாய் கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் மாணவியின் சடலத்தில் பல்வேறு இடங்களில் காயம் இருப்பதாக அவர் கொல்லப்பட்டதாக மாணவியின் தாய் குற்றம்சாட்டினார். முன்னதாக மாணவி பயன்படுத்திய நோட்டு புத்தகங்களை ஆய்வு செய்த போது அதில் மாணவி கல்லூரி தாளாளர் மனைவிக்க கடிதம் எழுதியது சிக்கியது.
அதில் தனக்கு வகுப்பு எடுக்கும், ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியை ஆகியோர் தன்னை படிக்காமல் விளையாட்டுத்தனமாக இருப்பதாக கூறி மற்ற மாணவர்கள் முன்னிலையில் கண்டித்தனர் என்றும் இது தனக்கு அவமானமாக இருந்ததால் இந்த முடிவை எடுக்கும் நிலை ஏற்பட்டதாகவும், தயவு செய்து மாணவிகளை இப்படி பேசாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கனியாமூர் தனியார் பள்ளியை மூடி சீல் வைக்க கோரி பள்ளி மாணவி உறவினர்கள் அரசு மருத்துவமனையில் இருந்து பேரணியாக சென்று கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுப்புகளை வைத்து தடுக்க முயன்ற போது தடுப்புகளை தள்ளிவிட்டு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கள்ளக்குறிச்சியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது