முடியை அறுத்து திருநங்கைகள் மீது தாக்குதல்… வைரலாகும் இளைஞர்களின் அராஜக வீடியோ… 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!!
Author: Babu Lakshmanan13 October 2022, 12:40 pm
தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே முடியை அறுத்து திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை துலுக்கர்பட்டியை சேர்ந்த திருநங்கை மகேஷ், இவருடைய தோழி தென்காசி மாவட்டம் கே.ஆலங்குளத்தினை சேர்ந்த அனன்யா. இவரும் திருநங்கை.
இவர்கள் இருவரும் கடந்த மாதம் 7ந்தேதி துலுக்கர்பட்டியில் இருந்து கெச்சிலாபுரத்திற்கு இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது, கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியை சேர்ந்த நோவாபூபன் மற்றும் சங்கரன்கோவிலை சேர்ந்த விஜய் இருவரும் வழிமறித்து திருநங்கைகளை கடத்தி சென்று கெச்சிலாபுரத்தில் உள்ள காட்டுபகுதியில் வைத்து தாக்கியுள்ளனர். மேலும் அனன்யாவின் முடியை அறுத்துள்ளனர்.
அதை வீடியோ எடுத்தது மட்டுமின்றி வெளியே சொல்லக்கூடாது என்று நோவாபூபன், விஜய் கூறியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அனன்யா, மகேஷ் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். நோவாபூபன், விஜய் இருவரும் அரசு மருத்துவமனைக்கு வந்து இந்த ஊரில் இருக்ககூடாது என்று திருநங்கைகளை அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையெடுத்து, 2 திருநங்கைகளும் அங்கிருந்து யாரிடமும் சொல்லமால் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், 2 திருநங்கைகள் தாக்கப்படும் வீடியோ காட்சிகளை சமூக செயற்பாட்டாளர் கிரேஸ்பானு என்பவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டதை தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்தது. மேலும், நோவாயுவான், விஜய் இருவரும் கழுகுமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது மட்டுமின்றி 2 பேரையும் தேடி வருகின்றனர்.
இது குறித்து கிரேஸ்பானு திருநங்கைகள் தாக்குதல் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தவுடன், தென்மண்டல காவல்துறை ஐ.ஜி. அஸ்ராகார்க் தொடர்பு கொண்டு இரு திருநங்கைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்படுவர்கள் என்று உறுதியளித்தாகவும், அதே போன்று வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருவதாகவும், காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும், திருநங்கைகள் மீதான தாக்குதல் மனித உரிமைகளை மீறியது என்றும், இது போன்ற தாக்குதலில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பது மட்மின்றி, இனி இது போன்ற சம்பவம் நடைபெறமால் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு என்று தெரிவித்துள்ளார்.