20 வயது இளம்பெண்ணுக்கு 45 வயது தோற்றம்.. அரிதான நோயால் அவதி : சிகிச்சைக்கு பின் ஆளே மாறிட்டாங்க.. கோவை அரசு மருத்துவமனை சாதனை!!
Author: Udayachandran RadhaKrishnan8 April 2022, 11:12 am
கோவை : மிகவும் அரிதான தன்னெதிர்ப்பு நோயால் பதிக்கப்பட்ட பெண்ணுக்கு காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த பெண் ஒருவர் வந்தார். 20 வயதான தனக்கு, 45 வயது போல் முகத்தோற்றம் இருப்பதாகவும், இடது புருவத்தில் முடி உதிர்ந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு ஃபாரி ரோம்பெர்க் சின்ட்ரம் (PARRY ROMBERG SYNDROME) என்ற அரிதான வகைநோய் இருப்பதை கண்டறிந்தனர்.
முகத்தில் ஒரு பக்கம் மட்டும் தசைகள் சுருங்கியும் தோலில் சுருக்கங்களுடனும் கொழுப்பு திசு அறவே நீங்கியும் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் நோயாக உள்ளது. மேலும், இந்த. நோயால் பாதிக்கப்பட்ட சிலர் புருவத்தில் முடியில்லாமல் கூட இருப்பார்கள்.
தனது நிலையை நினைத்து மிகுந்த மன உளைச்சல் அடைந்த அந்த பெண்ணுக்கு காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். தொடர்ந்து அவருக்கு கொழுப்பை முகத்தில் செலுத்தும் சிகிச்சை மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன்படி, வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் சேரும் கொழுப்பான திசுக்களை உறிஞ்சி எடுத்து முகத்தில் செலுத்தப்பட்டது. மேலும், பின் தலையில் உள்ள முடி வேர்களை தனியாக பிரித்து எடுத்து தேவையான இடத்தில் ஒட்ட வைக்கும் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளையும் இந்த பெண்ணிற்கு மருத்துவமனை முதல்வர் நிர்மலா வழிகாட்டுதலின் பெயரில் மருத்துவர்கள் ரமணன், செந்தில்குமார். பிரகாஷ், கவிதா பிரியா, சிவக்குமார், ஆகியோர் அடங்கிய குழுவினர் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
அறுவை சிகிச்சை முடிந்த பின் இப்போது புதுமையான தோற்றப் பொலிவோடு இந்த பெண் தன்னம்பிக்கையாக உள்ளார்.
0
0