மருத்துவ மாணவியின் உயிரை பறித்த புரோட்டா : கோவையில் சோகம்!
Author: Udayachandran RadhaKrishnan2 December 2024, 4:46 pm
கோவை, துடியலூர், அருகே உள்ள கவுண்டம்பாளையம் பேர்லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் ( 62). இவர் கட்டிட காண்ட்ராக்டர் தொழில் செய்து வருகிறார்.
இவரது மகள் கீ ர்த்தனா (வயது 21).
இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக கல்லூரியில் உள்ள விடுதியில் கீர்த்தனா தங்கி இருந்தார்.
வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு வந்து பெற்றோருடன் விடுமுறை நாட்களை கீர்த்தனா கழித்து விட்டு செல்வார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து இருந்தார்.
கீர்த்தனா சனிக்கிழமை இரவில் சாப்பிடுவதற்கு புரோட்டா வேண்டுமென கேட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு குடும்பத்தினர் கடையில் பரோட்டா வாங்கி கொடுத்து உள்ளனர். அதை கீர்த்தனா சாப்பிட்டார்.
இதையும் படியுங்க: எதுக்கு உடனடி அமைச்சர் பதவி? செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கோர்ட் அதிரடி கேள்வி!
பிறகு இரவு அவரது அறைக்கு சென்று தூங்கினார். வழக்கமாக கீர்த்தனா காலையில் சீக்கிரம் எழுந்து விடுவார். ஆனால் நேற்று காலை வெகு நேரம் ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை.
இதனால் குடும்பத்தினர் அவரது அறைக்கு எழுப்ப சென்று உள்ளனர். அப்போது அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எழுப்பி பார்த்த போது அவரது உடலில் அசைவு இல்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக கீர்த்தனாவை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு கீர்த்தனாவை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் கூறினர். உடனே அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கீர்த்தனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.