விருதுநகர் சிறை கைதிகளுக்கு இடையே அடிதடி… 25 பேர் வேறு சிறைக்கு மாற்றம் ; காவல் வாகன ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரகளை!!

Author: Babu Lakshmanan
12 June 2023, 4:36 pm
Quick Share

விருதுநகர் ; விருதுநகர் மாவட்ட சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 25 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்ட சிறையில் அடைப்பு செய்யப்பட்டிருந்த கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய கண்ணன் மற்றும் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட சிறைவாசி வடிவேல் முருகன் ஆகியோர் சிறையில் ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சி செய்யப் போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் உடனடியாக மேற்கண்ட சிறைவாசிகள் தங்கி இருந்த அறையில் உதவி சிறை அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்ட பொழுது, அவர்கள் உதவி சிறை அலுவலரிடம் தகராறு செய்த அடிப்படையில் அவர்கள் இருவரையும் தனித்தனியாக பிரித்து வேறு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சிறைவாசி வடிவேல் முருகன் என்பவர் மீண்டும் அந்த அறையில் அடைக்கப்பட்டிருந்த எழுமின் அகமத் என்பவரை கையால் முகத்தில் தாக்கி காயம் ஏற்படுத்தியும், மற்ற சிறைவாசிகளிடம் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட முயற்சி செய்தார்.

உடனடியாக சிறைத்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இந்நிகழ்வு கொண்டு செல்லப்பட்டதன் பேரில், இரவே உடனடியாக மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட சிறைக்கு நேரில் சென்று அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

மேலும், காயமடைந்த சிறைவாசி எழுமின் அகமத் உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் மாவட்ட சிறையில் அடைப்பு செய்யப்பட்டார். இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட வடிவேல் முருகன் மற்றும் அவரது குழுவினர் 25 பேர் உடனடியாக மதுரை மத்திய சிறைக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அப்பொழுது காவல் வாகனத்தில் ஏற மறுத்த வடிவேல் முருகன், காவல் வாகன ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டார். அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி அவர்களின் அறிவுரையின் பேரில் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் விருதுநகரில் முகாம் இட்டு நிலைமையை கண்காணித்து வருகிறார்.

சிறை அதிகாரிகள் உடனடியாக விரைந்து செயல்பட்டதன் அடிப்படையில் சிறைக்குள் பெரும் மோதல் தடுக்கப்பட்டுள்ளது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 337

    0

    0