நில அளவை பணிக்கு ரூ.25,000 லஞ்சம்… நில அளவையர் உள்பட 2 பேர் கைது ; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!!
Author: Babu Lakshmanan21 September 2023, 7:34 pm
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே நில அளவை பணிக்காக ரூ.25000 லஞ்சம் பெற்ற நில அளவையர் மற்றும் கிராம நிர்வாக அலுவலக ஊழியர் ஆகிய இருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானை அடுத்த வடகரை பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி புது மாடசாமி. இவரது சகோதரர் மகாராஜன். இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான 52 சென்ட் இடத்தை தனித்தனியாக பட்டா போடுவதற்கு கங்கைகொண்டான் பகுதி 1 கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, நிலத்தை அளவு செய்து பட்டா வழங்கும் நடவடிக்கைகளுக்கு நில அளவையர் லிங்கம்மாள் பட்டா ஒன்றிற்கு ரூ. 30,000 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனமில்லாத சகோதரர்கள் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
தொடர்ந்து நில அளவையர் லஞ்சம் கேட்ட நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி பட்டா ஒன்றுக்கு ரூ. 25000 தருவதாக பேசியுள்ளனர். எனினும், லஞ்சம் கொடுக்க மனம் இல்லாததால் இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி எஸ்கால்லிடம் புகார் அளித்தனர். அவர்கள் கூறியபடி அளவை செய்வதற்கு பணத்தை புது மாடசாமியின் சகோதரர் அருணாச்சலம் நில அளவையர் லிங்கமாவிற்கு, அவருடன் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணி செய்யும் சாந்தி மூலமாக கொடுத்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக இருவரையும் பிடித்தனர். அவர்களிடமிருந்து 25 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களது அலுவலகம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.