பிறந்த வீட்டுக்கு கணவருடன் விருந்துக்கு வரும் தங்கை… ரயில் முன் பாய்ந்து அண்ணன் தற்கொலை ; போலீசார் விசாரணையில் பகீர் தகவல்..!!

Author: Babu Lakshmanan
23 August 2023, 10:12 am

கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி பகுதியை சேர்ந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி ரயில் வழித்தடத்தில் இன்று மதியம் கன்னியாகுமரி-பெங்களூர் ரயில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ரயில் முன் பாய்ந்த வாலிபர் ஒருவர் உடல் சிதறி பலியானார். இதைத் தொடர்ந்து, ரயிலை நிறுத்திய ஓட்டுநர் சம்பவம் குறித்து அருகில் உள்ள இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து விட்டு ரயிலை ஓட்டி சென்றுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார், வாலிபரின் அடையாளங்களை வைத்து விசாரணை நடத்தியதில், அவர் பேயன்குழி பகுதியை சேர்ந்த 26 வயதான ராஜேஷ் என்பது தெரியவந்தது.

முடி திருத்தும் தொழிலாளியான முருகன் மற்றும் பேபி தம்பதியரின் மூத்த மகன் ராஜேஷ் என்பதும், ஒரு மகளும் உள்ள நிலையில் வறுமையால் வாடகை வீட்டில் வசிக்கும் முருகனால் குழந்தைகளை படிக்க வைத்து குடும்பத்தையும் நடத்த முடியாத நிலை இருந்து வந்துள்ளது. இதனால், பத்தாம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்திய ராஜேஷ், தந்தையுடன் சேர்ந்து முடி திருத்தும் தொழிலில் ஈடுபட்டு குடும்ப சுமையை சுமக்க தொடங்கியுள்ளார்.

தான் ஈட்டும் வருமானத்தை தாயிடமே கொடுத்து தங்கையை பனிரெண்டாம் வகுப்பு படிக்க வைத்த கையோடு, டிப்ளமோ நர்சிங் மேல் படிப்பும் படிக்க வைத்துள்ளார். படிப்பு முடித்த தங்கை தற்போது ஒரு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வரும் நிலையில், தான் திருமணம் செய்து கொள்ளாமல் தங்களது தகுதிக்கு ஏற்றாற்போல், தங்கைக்கு வரன் பார்த்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருமணமும் செய்து வைத்துள்ளார்.

இன்று புதன்கிழமை அன்று புதுமண ஜோடிகளை 7வது நாள் விருந்திற்காக வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் தடல்புடலாக செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ராஜேஷ் நேற்று காலை தனது பெற்றோர்களிடம் நாளை நடைபெறும் தங்கையின் விருந்து நிகழ்ச்சியில் அணிய புதிய ஆடை வாங்க பணம் கேட்டுள்ளார். பெற்றோர் பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. மறுகணமே மனமுடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்து வெளியேறி, கன்னியாகுமரி பெங்களூர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அவரது தாயார் கதறி அழுத நிலையில், ராஜேஷின் சடலத்தை மீட்ட இரணியல் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

தற்கொலை குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தங்கையின் திருமண விருந்து நிகழ்ச்சிக்கு அணிய புத்தாடை வாங்க பெற்றோர் பணம் கொடுக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?