தமிழகம் முழுவதும் வரும் 27-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்..! தமிழக அரசு அறிவிப்பு

Author: kavin kumar
23 February 2022, 10:18 pm

சென்னை : தமிழகம் முழுவதும் வரும் 27ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் முகாம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்ததால் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும்வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒத்திவைக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது.

அதன்படி, தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த நிலையில் , தமிழகம் முழுவதும் வருகிற பிப்ரவரி 27-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உட்பட 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ சிறப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்களில் சொட்டு மருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 வயதிற்குட்பட்ட 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாளில் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!