ஜேசிபியை களவாட முயன்ற ஓட்டுநர்…கையும் களவுமாக பிடித்த உரிமையாளர்: 3 பேரை கைது செய்த போலீசார்..!!
Author: Rajesh31 January 2022, 9:34 am
கோவை: கோவையில் ஜே.சி.பி இயந்திரத்தை திருடி கையும் களவுமாக சிக்கிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடக்கிபாளையத்தை சேர்ந்தவர் ராமராஜ் (50). ஜே.சி.பி இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரிடம் ஜே.சி.பி இயந்திர ஓட்டுநராக வேலைபார்த்து வந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தனபள்ளி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (24).
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் ஜெயபிரகாஷ் பணியில் இருந்து நின்றுவிட்டார். இதனைதொடர்ந்து நேற்று அதிகாலையில் தனது நண்பர்கள் புருஷோத்தமன் (25), சக்திவேல் (26) ஆகியோருடன் ஜே.சிபி இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முத்துதோட்டம் பகுதிக்கு சென்றார்.
மேலும், மூவரும் சேர்ந்து ஜே.சி.பி இயந்திரத்தை திருடிச்செல்ல முயன்றனர். காலையிலேயே இயந்திரத்தின் சத்தம் கேட்ட ராமராஜ் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்த போது ஜே.சி.பி இயந்திரத்தை யாரோ திருடிச் செல்ல முயல்வதை பார்த்து கூச்சலிட்டார். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் வந்து மூவரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மூவரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.