ஆசை காட்டி ரூ.3 கோடி மோசடி… பணத்தை கேட்டால் ஆளும்கட்சி என மிரட்டல் ; கம்பம் திமுக துணை சேர்மன் மற்றும் கணவர் மீது புகார்..!!

Author: Babu Lakshmanan
6 September 2023, 2:41 pm

தேனியில் தங்கள் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகக் கூறி பண மோசடி செய்த கம்பம் நகர திமுக துணை சேர்மன் மற்றும் அவரது கணவரான திமுக நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் சூர்யா சில்க்ஸ் ரெடிமேட்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தொடங்கி செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளராக கம்பம் நகராட்சி துணை சேர்மன் சுனோதா மற்றும் அவரது கணவரான திமுக கம்பம் நகர தெற்குச் செயலாளராக செல்வகுமார் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்கள் ஜவுளி நிறுவனத்தில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்தால், அவர்களுக்கு மாதம் மாதம் அதிக வட்டி தருவதாகவும், நான்கு வருடங்கள் கழித்து முதலீடு செய்த பணத்தை திருப்பி தருவதாகவும் கூறி, சுமார் 40க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் மூன்று கோடி வரையில் பணத்தை பெற்றுள்ளனர்.

பொதுமக்களிடம் வாங்கிய பணத்திற்கு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா உள்ளிட்ட பல காரணங்களை கூறி மாதம் மாதம் கொடுக்கப்படுவதாக கூறப்பட்ட தவணை பணத்தை கொடுக்கவில்லை என்றும், இது குறித்து அவர்களிடம் கேட்கும்போதெல்லாம் இப்போது தருகிறேன், அப்போது தருகிறேன் என்று காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், பணம் கொடுத்த அனைவரும் சேர்ந்து கேட்டபோது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் கூறி, பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதோடு, நாங்கள் ஆளும் கட்சியினர் எங்களை ஒன்று செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்ததாக பணத்தை இழந்தவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

சுமார் மூன்று கோடிக்கு மேல் பண மோசடி ஈடுபட்ட திமுக நகர துணை சேர்மன் மற்றும் திமுக நிர்வாகியான அவரது கணவர் மீது நடவடிக்கை எடுத்து, தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் அளித்துள்ளனர்.

  • meiyazhagan Movie OTT audience VS Theater audience மெய்யழகன்: ஓடிடி vs தியேட்டர் Audience Problem?
  • Views: - 524

    0

    0