ஒரே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள்…அதிவேகத்தில் கழிப்பிட சுவற்றில் மீது மோதி விபத்து: 2 பேர் பலி…பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!
Author: Rajesh25 April 2022, 9:43 am
கோவை: அன்னூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் மூன்று பேருடன் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் பொதுக் கழிப்பிட சுவற்றில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(21). அதே ஊரை சேர்ந்த ஸ்ரீஜித்(25). இவர்கள் இருவரும் அன்னூரில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக ஹாஸ்டலில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இருவரும் கோவை மாவட்டம், அன்னூரை சேர்ந்த தங்களது நண்பரான லூர்து சகாயராஜ்(25) உடன் ஒரே டூவீலரில் அன்னூர்-சத்தி சாலையில் அதிக வேகமாக சென்றுள்ளனர்.
அப்போது,சத்தி சாலையில் உப்புத்தோட்டம் கட் ரோடு அருகே சென்று கொண்டிருந்த பொழுது நிலை தடுமாறி சாலையின் ஓரமாக உள்ள பொதுக்கழிப்பிட சுவற்றில் பயங்கரமாக மோதியுள்ளது.
இதில் மூவரும் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து மூவரையும் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கிருஷ்ணசாமி,ஸ்ரீஜித் உள்ளிட்ட இருவரும் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாகவும், மற்றொருவருக்கு முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிவேகம் ஆபத்து என்பதை உணராத இளைஞர்கள் இருவர் சாலை விபத்தில் பரிதாபமாக பலியானதும், மற்றொருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை அதி வேகத்தில் டூவீலரில் வந்த 3 பேர் பொதுக்கழிப்பிட சுவற்றில் மோதி விபத்துக்கு உள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.