விலை உயர்ந்த பைக்குகளை மட்டுமே திருடும் இளைஞர்கள்: 3 பேர் கைது.. 25 வாகனங்களை பறிமுதல்..!

Author: Vignesh
30 August 2024, 12:51 pm

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதன் மீது தனி கவனம் செலுத்தும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் இருசக்கர வாகன திருட்டு சம்பவம் தொடர்பாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். தொடர் வாகன சோதனையிலும் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் , வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (25). இவர் திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரம் தொப்பி அணிந்து வீடு மற்றும் நிறுவனங்களுக்கு வெளியே நிற்கும் வாகனங்களை நோட்டமிட்டு சென்றுள்ளார்.

அடுத்த நாள் அதே பகுதிக்குச் சென்று தனியாக நிற்கும் வாகனங்களை திருடி வருவது வழக்கம். அவ்வாறு திருடி வரும் வாகனங்களை திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (32) என்பவரது ஒர்க் ஷாப்பில் 5000 முதல் 8000 வரை விற்பனை செய்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட தினேஷ் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வத்தலகுண்டு பகுதியில் உள்ள சண்முகசுந்தரத்திடம் வண்டியை ஒப்படைத்துள்ளார்.

சண்முகசுந்தரம் (34) வண்டிகளை திண்டுக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ஆவணங்கள் எதுவும் இல்லாமல் விற்பனை செய்து வந்துள்ளார். தொடர் விசாரணை மேற்கொண்டு அப்துல் ரகுமான், தினேஷ், சண்முகசுந்தரம் ஆகிய மூவரையும் கைது செய்த குற்றப்பிரிவு போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இதுவரை 25 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

  • Cwc Pugazh Ask Vote To Bigg Boss Contestants நம்ம பொண்ணு பிக் பாஸ்ல ஜெயிக்கணும்.. ஓட்டு போடுங்க : நடிகர் புகழ் வேண்டுகோள்!
  • Views: - 394

    1

    0