தமிழக கோவில்களில் திருடப்பட்ட விக்கிரங்கள்?…புதுவையில் ரூ.12 மதிப்புள்ள 3 உலோக சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை…!!

Author: Rajesh
13 April 2022, 3:21 pm

புதுச்சேரி: புதுச்சேரியில் உலோகத்தால் ஆன 3 சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

புதுச்சேரியில் உலோகத்தால் செய்யப்பட்ட சாமி சிலைகள் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று புதுச்சேரியில் சென்ட்ராயன் தெரு என்ற பகுதியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அங்கு 3 உலோக சிலைகளை கைப்பற்றியுள்ளனர். நடராஜர் சிலை, சிவன் சிலை மற்றும் விஷ்ணு சிலை ஆகிய மூன்று சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சிலைகள் தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து 1980க்கு முன்பாக கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சிலைகள் 600 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட சிலைகளாக இருக்கலாம் என்பதை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் சோழர்கள் மற்றும் விஜயநகர பேரரசுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஜோசப் கொலம்பானி என்பவர் இந்த சிலைகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அவர் உயிரிழந்துவிட்ட நிலையில் இந்த சிலைகளை அவர் யாரிடம் இருந்து வாங்கினார், அதற்கான ஆவணங்கள் எங்கு உள்ளன என்பது குறித்த விவரங்கள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. அதே சமயம் இந்த சிலைகள் எந்த தமிழக கோவில்களுக்குச் சொந்தமானவை என்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!