100 அடி கிணற்றை வெட்டும் பணியின் போது 3 தொழிலாளிகள் பலி.. வெடி வைக்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!
Author: Udayachandran RadhaKrishnan30 July 2024, 1:18 pm
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது அருங்குறிக்கை கிராமத்தில் கோவிந்தன் என்பவரது மகன் கண்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த பணியினை திருக்கோவிலூர் அருகே உள்ள பெருங்குருக்கை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம் வயது 48, நரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் வயது 40 நெய்வணை கிராமத்தைச் சேர்ந்த முருகன் வயது 38 ஆகியோர் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், இரவு சுமார் 8 மணியளவில் மீண்டும் கிணறு ஆழப்படுத்தும் பணியை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது பொக்லைன் இயந்திரத்தில் ரோப் கயிற்றால் பக்கெட்டை கட்டி கிணற்றுக்குள் மூவரும் இறங்கியுள்ளனர்.
இதில் எதிர்பாராத விதமாக இயந்திரத்தின் இரும்பு ரோப்பானது அறுந்து 100 அடி ஆழ கிணற்றில் மூவரும் விழுந்துள்ளனர் இதில் மூன்று பேரும் நிகழ்வு இடத்திலேயே கை கால் உள்ளிட்ட பகுதிகள் முறிந்து உயிரிழந்துள்ளனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மூவரது உடலை கிணற்றிலிருந்து மேலே எடுத்து வந்து கிடத்தி உயிரிழப்பிற்கு காரணமான பொக்லைன் இயந்திரத்தின் ஓட்டுனர், நிலத்தின் உரிமையாளர் மற்றும் இவர்களை இந்த பணிக்கு அழைத்து வந்த நபர் என மூன்று பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி கதறி அழுதுள்ளனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து மூவரவு உடலை ஒரு மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்த மூவரின் உறவினர்களும் ரோப் அறுந்து விழுந்ததில் இவர்கள் இறக்கவில்லை, கிணற்றை ஆழப்படுத்த சட்டத்திற்கு புறம்பாக ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி உள்ளனர். அதில் வெடிப்பு ஏற்பட்டு அதன் மூலமாக இவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் நேரில் வந்து இறந்தவர்களின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களையும் பிடித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மூவரது உடலை பிரேத பரிசோதனைக்காக உறவினர்கள் அனுப்பி வைத்தனர்.
கிணறு தூர்வாரும் பணிக்கு வந்த மூவரும்
சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.