காற்றாலை நிறுவன ஊழியரின் வீட்டில் 30 சவரன் நகை களவு : கொள்ளையர்களை தேடும் காவல்துறை!!
Author: Udayachandran RadhaKrishnan24 April 2023, 2:00 pm
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜோசப் ஸ்டாலின்.தனது மனைவி,மகன் மற்றும் மகளுடன் வசித்து வரும் இவர் வடுகபாளையத்தில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.
கடந்த சனிக்கிழமை விருதுநகரில் தனது சகோதரியின் இல்ல திருமண விழாவிற்கு தனது குடுமப்த்தினருடன் சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து நேற்றிரவு மீண்டும் பல்லடம் திரும்பியுள்ளனர்.
இரவு வீட்டிற்கு வந்த பொழுது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜோசப் ஸ்டாலின் வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் வைத்திருந்த 30 சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து ஜோசப் ஸ்டாலின் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.