படுஜோராக நடக்கும் போதை ஊசி விற்பனை…போதை வலையில் சிக்கிய இளைஞர் பட்டாளம்: மருந்து கடை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது..!!

Author: Rajesh
13 March 2022, 1:06 pm

தர்மபுரி: இளைஞர்களுக்கு போதை ஊசி செலுத்தி வந்த மருந்து கடை உரிமையாளர் உள்பட நான்கு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கோம்பேரி சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட போதை ஊசிகள், மருந்து குப்பிகள் சாலையோரம் கிடந்துள்ளது. இதுகுறித்த தகவலின்பேரில் தர்மபுரி மாவட்ட மருந்து துறையைச் சேர்ந்த ஆய்வாளர் சந்திராமேரி தலைமையிலான அதிகாரிகள், காவல்துறை முன்னிலையில் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே மிட்டாதின்ன அள்ளி மயில் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த வஜ்ரவேல் என்பவர் போதை ஊசியை இளைஞர்களுக்குப் போட்டு வருவதாக தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில் வஜ்ரவேலைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மருந்து கடை ஒன்றில் போதை ஊசிகளை வாங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்ட மருந்து கடை உரிமையாளர் சோமசுந்தரம் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். பெங்களூருவில் இருந்து காமராஜ் என்பவர் போதை மருந்தை வாங்கி வந்து தன்னிடம் கொடுப்பதாகவும், அதை தன்னுடைய கடையில் ரகசியமாக வைத்து விற்பனை செய்து வந்ததாகவும், இதில் சாமிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் தொடர்பு உள்ளதாகவும் மருந்து கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து முருகேசனைப் பிடித்து விசாரித்தபோது, அவர் தன்னுடைய நண்பர் ஒருவரின் வீட்டில் போதை மருந்துகளை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மருந்துத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் அதியமான்கோட்டை காவல்நிலைய காவல்துறையினர் நான்கு பேரையும் மார்ச் 11ம் தேதி கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இளம்பெண்கள் சிலரும் இவர்களுக்கு வாடிக்கையாளர்களாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், சுமார் 200க்கும் மேற்பட்ட ரெகுலர் வாடிக்கையாளர்களை இவர்கள் கைவசம் வைத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் போதை ஊசி செலுத்த 50 ரூபாய் வசூலித்து வந்துள்ளனர்.

பிடிபட்டவர்களில் முருகேசன் என்பவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக போதை ஊசிகளை விற்பனை செய்து வந்திருக்கும் அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. கைதான நான்கு பேரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் தர்மபுரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். போதை ஊசி கும்பல் பிடிபட்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1138

    0

    0