வேலூரில் ஒரு நிர்பயா கொடூரம்…ஆட்டோவில் பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம்: மைனர் சிறுவர்கள் உள்பட 5 பேர் வெறிச்செயல்..!!

Author: Rajesh
23 March 2022, 11:57 am

வேலூர்: வேலூரில் சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்த பெண் மருத்துவரை 5 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு 2 இளைஞர்கள் போதையில் ஒருவருக்கொருவர் தடியால் தாக்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து போதையில் இருந்த 2 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறி சம்பவம் மட்டுமின்றி பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது,

கடந்த 3 நாட்களுக்கு முன்பு காட்பாடியில் ஆண் நண்பருடன் இரவு காட்சி சினிமா பார்த்துவிட்டு வேலூர் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவர் இருப்பிடம் திரும்புவதற்காக ஆட்டோவுக்கா காத்திருந்துள்ளார். அப்போது, அங்கு ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதில் ஏற்கனவே 4 பேர் இருந்ததால், இந்த பெண் தயக்கம் காட்டியுள்ளார்.

ஆனால், அதற்கு அந்த ஓட்டுநரோ இது ஷேர் ஆட்டோ தான் ஏறுங்க என கூறியுள்ளார். இதனையடுத்த, வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே சத்துவாச்சாரியை நோக்கி திரும்பியுள்ளது. இது குறித்த, அந்த பெண் மருத்துவர் ஆட்டோ டிரைவரிடம் கேட்டபோது, வழியில் பேரிகார்டு வைத்து அடைத்துள்ளனர். சத்துவாச்சாரி சென்று ஆற்காடு சாலை வழியாக இருப்பிடம் செல்லலாம் என்று கூறி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை வழியாக வந்துள்ளனர்.

அப்போது, ஆட்டோ கலெக்டர் அலுவலகம் முன்பாக பாலாற்றங்கரை செல்லும் சாலை வழியாக ஆட்டோவை திருப்பியபோது, அப்பெண் மீண்டும் ஆட்டோ டிரைவரிடம் தவறான வழியில் செல்வது பற்றி கேட்டார். உடனடியாக ஆட்டோவில் வந்தவர்கள் அப்பெண்ணுடன் வந்த ஆண் நண்பரை அடித்து சாலையில் தள்ளிவிட்டு பாலாற்றங்கரையோரம் அப்பெண்ணை மிரட்டி அழைத்து சென்றுள்ளனர்.

அங்குள்ள பார் அருகே வைத்து 3 பேர் அந்த பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டு, செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு அப்பெண்ணை விரட்டியுள்ளனர். தொடர்ந்து ஏடிஎம் கார்டு மூலம் பெண் மருத்துவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தையும் எடுத்து சென்றுள்ளனர்.

அந்த பணத்தை பங்கிடும்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின்போதுதான் போலீசில் சிக்கினர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். மேலும் போதை ஆசாமிகள் கொடுத்த தகவலின்பேரில், மேலும் ஒருவரையும் போலீசார் பிடித்தனர். பிடிப்பட்ட 3 பேரிடமும் சத்துவாச்சாரி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை பெண் மருத்துவரை, அவரது ஏடிஎம் கார்டை வைத்து அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். அந்த பெண் மருத்துவரையும், அவரது நண்பரையும் நேரில் அழைத்து புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் தற்போது பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தடுக்கப்படும்என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Annamalai Warning About VijayTrisha Controversy விஜயுடன் திரிஷா சென்றால் தப்பா? சும்மா விட மாட்டேன் : பகிரங்க எச்சரிக்கை!
  • Views: - 2031

    0

    0