புத்தாண்டு தினத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி.. மேற்கூரை இடிந்து விழுந்ததால் விபரீதம்!!!
Author: Udayachandran RadhaKrishnan1 January 2024, 12:21 pm
புத்தாண்டு தினத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி.. மேற்கூரை இடிந்து விழுந்ததால் விபரீதம்!!!
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது தாய் சாந்தி (70), மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (12), ஹரிணி (10)என ஐந்து பேர் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் மாரிமுத்து தங்கை கணவர் சென்னையில் இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சிக்காக மாரிமுத்து நேற்று சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் வழக்கம்போல் படுத்து உறங்கி உள்ளனர்.
இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அவர்களது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிப்பாடுகளில் சிக்கிய சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
நள்ளிரவு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது அப்பகுதியில் உள்ள யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மாடியில் சென்று போழுது ஏதேச்சையாக பார்த்துள்ளார்.
அப்பொழுது மாரிமுத்து வீட்டின் மேற்கூரை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக வந்து பார்த்தபோது மாரிமுத்துவின் வீட்டின் மேற்கூரை இடிந்து கிடப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டதோடு உடனடியாக திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி தீயணைப்பு துறையினர் ஈடுபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த நான்கு பேர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
புத்தாண்டு பிறந்து உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டும் வரும் நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.