திருப்பூர் நகை அடகு கடையில் நகைகள், பணம் கொள்ளை போன விவகாரம் : மகாராஷ்டிராவில் 4 கொள்ளையர்கள் கைது.. சிக்கியதின் முழு பின்னணி!!
Author: Udayachandran RadhaKrishnan6 March 2022, 8:56 am
திருப்பூர் : நகை அடகுக்கடையில் 375 சவரன் தங்க நகைகள், 14 லட்சம் ருபாய் ரொக்கம் , 28 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் , வடமாநில கொள்ளையர்கள் 4 பேர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக நகைக்கடை மற்றும் நகை அடகுக்கடை இருந்து வருகிறது . கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நகைக்கடை நடத்தி வரக் கூடிய சூழ்நிலையில் கடைக்கு பின்புறமாக வீட்டில் குடியிருந்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டை காலி செய்து வேறு ஒரு பகுதியில் குடியேறிய நிலையில் பின்புறம் உள்ள வீடு காலியாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று காலை வந்த கடையை திறந்து பார்த்தபோது கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடை உரிமையாளர் ஜெயகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடையில் இருந்த 375 சவரன் தங்க நகைகள் , 9 கிலோ வெள்ளி மற்றும் 25 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் தடவயியல் நிபுணர்களை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களை பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைத்து விசாரனை மேற்கொண்டனர்.
சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது , இந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்ந்த நபர்கள் முகமூடி அணிந்தபடி கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
நகை மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்த பின்பு கொள்ளையர்கள் ரயில் மூலம் தப்பி சென்றது ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கண்டறிந்தனர் அதனை தொடர்ந்து மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இதனிடையே திருப்பூரில் இருந்து ரயில் மூலம் தப்பிச் சென்ற வடமாநில கொள்ளையர்கள் சென்னையிலிருந்து மகாராஷ்டிரா செல்லும் ரயிலில் தப்பி சென்றது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளின் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர். மேலும் தனிப்படையினர் மற்றொரு ரயிலில் மகாராஷ்டிர நோக்கி பயணித்தனர். இதனிடையே தனிப்படையினர் அனுப்பிய கொள்ளையர்களின் வீடியோ பதிவை கொண்டு ரயில்வே போலீசார் ரயிலில் உள்ள கொள்ளையர்களை தேடினர்.
பின்னர் அவர்களை கண்டுபிடித்த ரயில்வே போலீசார் நாக்பூர் அருகே பலர்சா என்ற இடத்தில் வைத்து ரயில்வே போலீசார் கைது செய்தனர். பின்னர் திருப்பூர் தனிப்படையினர் அங்கு சென்றதும் கொள்ளையர்களை ரயில்வே போலீசார் தனிப்படையினர் இடம் ஒப்படைத்தனர்.
கொள்ளையர்களிடம் சோதனை செய்ததில் 3 கிலோ தங்கம் 28 கிலோ வெள்ளி 14 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையர்களை நாக்பூர் நீதிமன்றத்தில் கைது காண்பித்த பின்னர் போலீசார் திருப்பூர் அழைத்து வர உள்ளனர். நகை அடகு கடையில் வடமாநிலத்தவர் தங்கியிருந்ததும், கடையை நோட்டமிட்டு திட்டமிட்டு கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது.