கோவை மாநகராட்சி கவுன்சிலர்களில் 100ல் 40 பேர் பட்டதாரிகள்… படித்தவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உருவாக்குவதே லட்சியம் : அதிமுக கவுன்சிலர் உறுதி
Author: Udayachandran RadhaKrishnan1 March 2022, 8:36 pm
கோவை மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாநகராட்சியை திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. திமுக 73 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 4 இடங்களிலும், மதிமுக 3 இடங்களிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.
மனிதநேய மக்கள் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. கோவை மாநகராட்சியை தனிப்பெரும்பான்மையுடன் திமுக கைப்பற்றியுள்ளது. முதன்முறையாக, கோவை மாநகராட்சி மேயர் பொறுப்பை திமுக அலங்கரிக்க உள்ளது. இதற்கான மறைமுகத் தேர்தல் 4ம் தேதி நடைபெற இருக்கிறது.
எதிர்கட்சியான அதிமுக வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நாளை பதவியேற்க உள்ளனர்.
இந்த நிலையில், கோவை மாநகராட்சியில் வெற்றி பெற்ற 100 கவுன்சிலர்களில் 40 பேர் பட்டதாரிகள் என்னும் தகவல் கிடைத்துள்ளது.
அவர்களில், 25 கவுன்சிலர்கள் பட்டதாரிகள் ஆவர். 13 பேர் முதுகலை பட்டதாரிகள். 2 பேர் பிஎச்டியும் முடித்துள்ளனர். மேலும், 7 பேர் கல்வியை முறையாக பயிலாதவர்களாக இருக்கின்றனர். எஞ்சியுள்ள 53 கவுன்சிலர்கள் 5வது முதல் 10வது படித்தவர்களாக உள்ளனர்.
மேயர் போட்டியில் உள்ள மீனா லோகநாதன் முதுகலை பட்டதாரியாவார். அதேபோல, மற்றொரு போட்டியாளரான திமுக முன்னாள் எம்எல்ஏவின் மனைவியான இலக்குமி பன்னிரெண்டாம் வகுப்பும், இளம் மேயர் வேட்பாளரான நிவேதா முதுகலை 2வது ஆண்டும் பயின்று வருகின்றனர்.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களின் வார்டில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளையும், வாக்குறுதிகளையும் சொல்லி வருகின்றனர்.
அந்த வகையில், கோவை மாநகராட்சியில் அதிமுகவுக்கு முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்தவரும், அதிமுக மேயர் வேட்பாளருமாக பார்க்கப்பட்ட ஷர்மிளா சந்திரசேகர், தங்கள் வார்டில் உள்ள படித்த பட்டதாரிகளை கண்டறிந்து, அவர்களுக்கு தனியார் நிறுவனங்களை உரிய பணியினை பெற்றுக் கொடுப்பதே லட்சியம் எனக் கூறியுள்ளார். மேலும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண்பேன் என்றும் உறுதியாக கூறியுள்ளார்.